லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் கனமழையால் மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வானிலை திடீரென மாறியது. கருமேகங்கள் சூழ்ந்ததுடன், பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. தொடர்ந்து கனமழையும் பெய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். பாதுகாப்பிற்காக பலர் பெரிய மரங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் கீழே விழுந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மேலும் விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளும் காற்றில் பறந்ததால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டன.
இந்த இயற்கை பேரிடரில் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக பிரயாக்ராஜ் நகரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பதோஹியில் 18 பேரும், மிர்சாப்பூரில் 15 பேரும், பதேபூரில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் உன்னாவோ மற்றும் பதுவான் பகுதிகளில் தலா 6 பேரும், பிரதாப்கார்க் மற்றும் பேரலியில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். சிதாப்பூர், ரேபரேலி, சந்தவுலி, கான்பூர் தேஹட், ஹர்தோய் மற்றும் சம்பல் பகுதிகளில் தலா 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுசம்பி, ஷாஜஹான்பூர், சோன்பந்த்ரா மற்றும் லகிம்பூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சாலைகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மீட்புப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் Yogi Adityanath, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
