அமெரிக்க அதிபர் Donald Trump, பார்லிமென்டின் அனுமதி இன்றி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகார தீர்மானம்’ அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது டிரம்புக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம், அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்பின் வரம்புகளை மீறியுள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்க போர் அதிகாரச் சட்டத்தின்படி, வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டால், 60 நாட்களுக்குள் பார்லிமென்டின் ஒப்புதலை அதிபர் பெற வேண்டும். இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த சூழலில், ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் 215-208 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சியினர், “அமெரிக்க மக்களின் சார்பில் டிரம்புக்கு அனுப்பப்பட்ட முக்கியமான செய்தி இது. சட்டவிரோதமாக தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தனர்.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானத்திற்கு குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க பார்லிமென்டின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த தீர்மானம் சட்டமாக அமலுக்கு வருவதற்கு முன்பு வெள்ளை மாளிகையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. தனது ராணுவ அதிகாரங்களை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கையை தடுக்க, அதிபர் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
