புளோரிடா: ஈரான் அரசின் முன்னணி தலைவருடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த தலைவரின் பெயரை வெளியிட அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போர் தற்போது 4வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் அரசு மறுத்தது.
இதையடுத்து புளோரிடாவில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானின் முன்னணி தலைவருடன் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அது ஈரானின் ஆட்சியாளரான மொஜ்தபா கமேனியுடன் அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், “ஈரானின் முதற்கட்ட மற்றும் முக்கிய தலைவர்களில் பலரை நாங்கள் நீக்கியுள்ளோம். தற்போது மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது எளிதானது அல்ல” என்றும் கூறினார்.
தான் யாருடன் பேசி வருகிறார் என்பதை வெளிப்படுத்த மறுத்த டிரம்ப், “மொஜ்தபா கமேனியுடன் பேசவில்லை. அவர் உயிருடன் உள்ளாரா என்பதும் தெளிவில்லை. அவரை தலைவராக நான் கருதவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
