“ஈரான் அடையாளமே இல்லாமல் போகும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்: போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால், ஈரான் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போரால் ஈரானின் பல முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நிலவி வருவதால், உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பையும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஈரான் தன்னிடம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், போர் இழப்பீடு கோரும் கோரிக்கையை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த நிபந்தனைகள் காரணமாக, இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானைப் பொறுத்தவரை நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களைப் பற்றிய அடையாளமே மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலக வரைபடத்தில் ஈரானை குறிவைத்து அம்புக்குறி காட்டும் வகையில் ஒரு படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சில அரபு நாடுகள் அமெரிக்க ஆதரவு நாடுகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
டிரம்பின் இந்த பதிவு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
