வாஷிங்டன்: ஈரானுக்கு அமெரிக்க படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் எங்கும், குறிப்பாக ஈரானுக்கு, படைகளை அனுப்பப் போவதில்லை. ஒருவேளை அப்படிச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அதை முன்கூட்டியே வெளிப்படுத்த மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க பொருளாதாரம் குறித்து பேசுகையில், சமீபத்தில் டவ் ஜோன்ஸ் குறியீடு 50,000 புள்ளிகளை எட்டியதை அவர் குறிப்பிட்டார். இது தன்னுடைய பதவிக்காலத்தில் நடைபெறாது என்று பலர் கருதியிருந்தாலும், அது சாத்தியமானதாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளில் செய்ய வேண்டிய பல முன்னேற்றங்களை ஒரு ஆண்டிலேயே சாதித்துவிட்டோம் என்றும், பொருளாதாரம் வலுவாக இருந்தது, எரிபொருள் விலைகள் குறைவாக இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையில் தான் ஈரானில் நடைபெறும் சம்பவங்களை கவனித்ததாகவும், தலையிட விருப்பம் இல்லாத போதிலும் அவசியம் காரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
போர் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்திருந்தாலும், நிலைமை வேறுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். போர் முடிவடைந்த பின் உலகம் மேலும் பாதுகாப்பாக மாறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றன என்றும், பல நாடுகள் இதற்கு எதிராக உள்ளன என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
