“இருண்டதெல்லாம் பேய் அல்ல” – ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
புதுடெல்லி: டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளை முன்வைத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட விமர்சனத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டாடா குழுமத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி விமர்சனம்
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்ட ராகுல் காந்தி, டாடா குழுமம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து வணிகத் தலைவர்கள் மௌனம் காப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும், இந்திய வணிக உலகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல என்றும், இந்த விவகாரத்தில் தங்கள் கட்சி நீதியைப் பெற்றுத் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பதிலடி
ராகுல் காந்தியின் கருத்துகளுக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சினைகளை நேரடியாகக் குற்றவியல் குற்றங்களாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்தியத் தொழில்துறையினரின் வெற்றிகளை இழிவுபடுத்துவதுடன், அவர்களிடையே அவநம்பிக்கையை உருவாக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த உரிமம் மற்றும் ஒதுக்கீட்டு முறைகள் இந்தியத் தொழில்முனைவோரைப் பாதித்ததாகவும், பலர் வறுமையில் வாடியதாகவும் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதற்கு மாறாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழில்துறையை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் துறையாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார். முதலீடுகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் கூறினார்.
தொழில்துறைக்கு ஆதரவளிப்பது, விவசாயிகளை வலுப்படுத்துவது, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு மற்றும் நிறுவனங்களுக்குப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, ராகுல் காந்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீதித்துறை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் விமர்சனங்களை முன்வைத்ததாகவும் குற்றம்சாட்டிய அவர், “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தனது பதிலை நிறைவு செய்தார்.
