“இன்ஸ்டாகிராமால் தவெக ஆட்சிக்கு வந்தது” – ஸ்டாலின் விமர்சனம்
தஞ்சை: “சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததால் நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகி பூண்டி கலைச்செல்வனின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
அப்போது, “ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த இயக்கத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றன. வெற்றியும் தோல்வியும் இரண்டையும் சமமாக கருதி பணியாற்றுபவன்தான் உண்மையான திமுக தொண்டன்” என்று கூறினார்.
மேலும், “திமுக என்பது வலுவான கட்டமைப்பைக் கொண்ட கட்சி. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே நாங்கள் பல்வேறு பணிகளை தொடங்கி விட்டோம். பூத் கமிட்டி அமைத்தல், ஒன்றிணைவோம் வா திட்டம், எஸ்ஐஆர் பணிகள், இளைஞரணி மற்றும் மகளிரணி மாநாடுகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்” என்றார்.
“இவ்வளவு பணிகள் செய்தும் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆனால், எந்த அமைப்புப் பணிகளும் செய்யாமல், பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளையே நியமிக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். அதில் தவறு எதுவும் இல்லை” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து, சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து பேசிய அவர், “குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி, சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி, அவர்கள் மூலமாக குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட பணிகள் நடைபெற்றன” என்று கூறினார்.
“இனிமேல் அதுபோன்ற பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நாம் உஷாராக இருந்து திட்டமிட்டு செயல்பட உள்ளோம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள்” என்றும் அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், “கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் பல பணிகளை செய்திருப்போம். அது தற்போது தடைபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இறுதியாக, “இன்று நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுகவின் போராட்டங்களையும் மக்களின் உரிமைகளையும் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம். நமது திட்டங்கள் இருக்கும் வரை நமது ஆட்சிதான். இப்போதும் நாம் ஆட்சியில் இருப்பதுபோலவே செயல்படுவோம்” என்று ஸ்டாலின் கூறினார்.
