“இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறியுள்ளது” – அமித்ஷா அறிவிப்பு
ராய்ப்பூர்: இந்தியா தற்போது நக்சல் இல்லாத நாடாக மாறியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை பாராட்டினார்.
அப்போது அவர் கூறுகையில், “1971 முதல் 2026 மார்ச் 31 வரை நாடு நக்சலிசத்தின் தாக்கத்தை அனுபவித்தது. தற்போது இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறியுள்ளது என்பதை பெருமையுடன் கூறுகிறேன்,” என்றார்.
மேலும், “இந்த இலக்கை அடைய பல பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீரர்களின் தியாகம் மற்றும் 50 ஆண்டுகால ரத்தக் களரி, அச்சம், வளர்ச்சி முடக்கம் ஆகியவற்றுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
“50 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை அடுத்த 5 ஆண்டுகளில் சரிசெய்யும் பணியை அரசு மேற்கொள்ளும்,” எனவும் அமித்ஷா உறுதி அளித்தார்.
நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்யாத பாதுகாப்புப் படை வீரர்கள் எவரும் இருக்க முடியாது என்றும், பலர் நாட்டிற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சரணடைந்த மாவோயிஸ்டுகளை கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டு, அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதே பிரதமர் மோடியின் இலக்கு,” என கூறிய அமித்ஷா, சாலைகள், ஊரக வளர்ச்சி, வங்கிகள், தபால் நிலையங்கள், எரிவாயு சிலிண்டர்கள், குடிநீர், இலவச உணவுத்தானியங்கள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நக்சல் ஆதிக்கத்தை பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் முறியடித்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.
