இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய முதலீடாக, AirTrunk இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறிப்பிடத்தக்க வேகத்தில் முன்னேறி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, ஏர் டிரங்க் நிறுவனம் இந்தியாவில் 5 ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய தரவு மையத்தை (Data Center) அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த முதலீடு, இந்தியாவை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கான உலகளாவிய மையமாக உருவாக்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எதிர்கால டிஜிட்டல் உலகின் முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
