தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட சமூக வலைதள பதிவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததையடுத்து காலியாகியுள்ள ராஜ்யசபா இடத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டு, அதில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் பெயர்களையும் சேர்த்திருந்தார்.
இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த சண்முகம், புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்தோ தங்களிடம் யாரும் ஆலோசனை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை கூட்டணியில் இடம்பெற்றதாக குறிப்பிடுவது தவறானது என்றும் அவர் கூறினார்.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதற்கான தங்களது நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சண்முகம், பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக வலைதள பதிவு “அதிகப் பிரசங்கித்தனம்” என்று விமர்சித்தார்.
இந்த விவகாரம், ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
