மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்திற்குப் பிறகு, தனது தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளான பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆயுத கொள்முதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னேறி வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதுகுறித்து இந்திய அரசோ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே அமெரிக்காவின் THAAD மற்றும் Patriot போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வரும் UAE, பாதுகாப்பு உபகரணங்களை ஒரே நாட்டை மட்டுமே சார்ந்து வாங்காமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்தும் கொள்முதல் செய்யும் கொள்கையை பின்பற்றி வருகிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவைத் தொடர்ந்து இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் நான்காவது வெளிநாட்டு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாறும்.
கடந்த ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களான பிரமோஸ் மற்றும் ஆகாஷ்தீர் அமைப்புகளின் செயல்திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ராணுவ உபகரண ஏற்றுமதி ரூ.38,424 கோடியைத் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
பிரமோஸ் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளில் ஒன்றாகும். தரை, கடல் மற்றும் வான் தளங்களில் இருந்து இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பாகும். எதிரி ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை ரேடார் மூலம் கண்டறிந்து அவற்றை துல்லியமாக தடுத்து அழிக்கும் திறன் இதற்கு உள்ளது.
