திருநெல்வேலி,
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக கட்சியினருக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படும் அதிமுக வேட்பாளர் பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வாக்காளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும், திமுகவினருக்கு மட்டும் பணம் வழங்க வேண்டாம் என்றும் கூறப்பட்டதாக உள்ளது.
மேலும், காங்கிரஸ் சார்பினருக்கு பணம் வழங்க வேண்டும் என்றும், யார் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும் என்றும், தேவையான அளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியதாக வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், 50 ஓட்டுகள் கூட தேர்தல் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கக்கூடும் என்றும், ராதாபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை 40 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எடுத்துக்காட்டாக கூறியதாகவும் தெரிகிறது.
இதனால், எந்த ஓட்டையும் தவற விடாமல் செயல்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பினரை இணைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
