மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட சமீபத்திய பதற்றமான சூழ்நிலையின்போது, ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஆர்மீனியப் பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அண்மையில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஈரானில் சிக்கியிருந்த இந்தியக் குடிமக்களை பாதுகாப்பாக மீட்க ஆர்மீனியா வழங்கிய ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
