ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளனர்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதற்கட்டமாக 40 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்தப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அதிருப்தியில் இருந்த எம்எல்ஏக்கள் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மற்றும் சேத்தன் சிங் ஜோரமஜ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி வெளிப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப்பும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதிவில், பஞ்சாப் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், மக்கள் தன்மீது காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் கடைசி மூச்சு வரை கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான குன்வர் விஜய் பிரதாப், கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர்.
இந்நிலையில், ராஜினாமா செய்த மூன்று எம்எல்ஏக்களும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியில் இணைந்தனர். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த அரசியல் மாற்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
