தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த ரூ.11,526 கோடி பொது நிதி, நிதித்துறையின் சிறப்புப் பணிக்குழு மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு அரசின் கருவூலத்தில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு துறைக்கும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதியின் ஒரு பகுதி முழுமையாக பயன்படுத்தப்படாமல், சம்பந்தப்பட்ட துறைகளின் வங்கிக் கணக்குகளில் நீண்டகாலமாக முடங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசு நிதித்துறையின் கீழ் சிறப்புப் பணிக்குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வில், 2021 நவம்பர் 1 முதல் 2025 ஜூன் 24 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த மொத்த ரூ.11,526 கோடி கண்டறியப்பட்டது. பின்னர் அந்த தொகை முழுவதும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
இந்த ஆய்வில் உள்ளாட்சி துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பயன்பாடின்றி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேனி ராம்கி கேட்ட தகவலின் மூலம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு நிதியில் ஒரு ரூபாய் கூட பயன்பாடின்றி இருக்கக் கூடாது என்பதற்காக சிறப்புப் பணிக்குழு நடவடிக்கை எடுத்ததாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிதி முடக்கம் ஏற்படாமல் தடுக்க இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தனர்.
