அமெரிக்க ஓபன் காலிறுதியில் அல்கராஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தொடரின் 8-வது நாளில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்கராஸ், 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் டாமி பாலை வீழ்த்தி அல்கராஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தியாபோ, பென் ஷெல்டனும் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில், 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாபோவை எதிர்கொண்டார்.
இதில் மெத்வதேவை 7-6 (7-1), 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வீழ்த்திய தியாபோ காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 6-2, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
அதேவேளையில், அர்ஜென்டினாவின் தோமாஸ் எசட்செவெரி, அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனிடம் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மகளிர் பிரிவில் சபலென்கா முன்னேற்றம்
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில், முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக்கை 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மேலும், 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், 26-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ, ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீராம் பாலாஜி ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அமெரிக்காவின் இவான் கிங் ஜோடியுடன் இணைந்து விளையாடினார்.
இந்த ஜோடி 4-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பிரான்சின் எட்வர்ட் ரோஜர்-வாசலின் மற்றும் மொனாக்கோவின் ஹியூகோ நிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
