டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் 12வது நாளாக நேற்று போர் தொடர்ந்த நிலையில், அப்பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளே அடுத்த குறியாக இருக்கும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் இஸ்லாமிய குடியரசு ஆட்சியை அகற்றும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலாக அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் குண்டு வீசி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு வங்கி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதலில் வங்கி ஊழியர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
எங்கள் நாட்டின் பொருளாதார நிறுவனங்கள் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய மேற்காசிய நாடுகளில் உள்ள பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளை நாங்களும் தாக்குவோம்.
அதை செய்வதற்கான சுதந்திரத்தை அவர்களே எங்களுக்கு வழங்கியுள்ளனர். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், என்விடியா, ஆரக்கிள் ஆகியவற்றின் அலுவலகங்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளும் புதிய இலக்குகளாக இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரான் அனுப்பிய ட்ரோன்களில் இரண்டு துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்ததில் இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்
