குவஹாத்தி: Assam சட்டசபையில் பொது சிவில் சட்டம் (UCC) இன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் Uttarakhand மற்றும் Gujarat மாநிலங்களை தொடர்ந்து அசாமிலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதிமுறைகள் அமலில் இருக்கும்.
மேலும், ஒருவருக்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்வதைத் தடுக்கும் கடுமையான விதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. மனைவிக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது அல்லது குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்ற காரணங்களுக்காக மறுமணம் செய்ய முடியாது என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மனைவி உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருக்கவும் அனுமதி இல்லை. லிவ்-இன் உறவில் வாழ்பவர்கள் அதை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் அல்லது விவாகரத்து நடந்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் இருவரும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் பேசிய அசாம் முதல்வர் Himanta Biswa Sarma, “பொது சிவில் சட்டம் பெண்கள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், இதுவரை ஒரு ஆண் இறந்தால் அவரது சொத்துகள் மனைவிக்கே சென்றதாகவும், புதிய சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் சம உரிமை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
லிவ்-இன் உறவுகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் பல இடங்களில் பலருடன் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
