ரூ.8 ஆயிரம் கூப்பன் மாடல் விநியோகத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியதாக திமுக பிரசாரம் செய்வது உண்மைக்கு புறம்பானது என்றும், அது மக்களை தவறாக வழிநடத்தக்கூடியது என்றும் தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘இல்லத்தரசி திட்டம்’ என்ற பெயரில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும், அதனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆதரவு உருவாக்கும் நோக்கில் திமுகவினர் வீடு வீடாக கூப்பன் விநியோகம் செய்து வருகின்றனர். பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினரால் இத்தகைய கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகளில் இந்த விநியோகத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததால் தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த ஒருவர் ரூ.8,000 கூப்பன் மாடல் விநியோகம் குறித்து பதிவு வெளியிட்டு, பொதுமக்களிடம் கூப்பன் வழங்க தேர்தல் கமிஷனிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் பிரச்சனை செய்தால் அனுமதி நகலை காட்டலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனுடன் அனுமதி கடிதம் என கூறி ஒரு ஆவணமும் வெளியிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மின்னணு ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அந்த சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரங்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும், அது மக்களை தவறாக வழிநடத்தக்கூடியது என்றும் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது.
