திருச்சி:
தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக, அ.தி.மு.க. சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் உள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இதுவரை இல்லாத அளவில், 164 பக்கங்கள் கொண்ட வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது பெயரிலும், கணவர் மற்றும் திருமணமாகாத மகன் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தன்னிடம் 26.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 15.48 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், 3.29 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி, 1.84 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டினம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த சொத்து மதிப்பு ₹1,049.56 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அவரது கணவர் மார்ட்டின் பெயரில் ₹3,262 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ₹887.36 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளதாகவும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ₹437 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அளவிலான சொத்து கணக்கை வெளியிட்டதன் மூலம், லீமா ரோஸ் இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சொத்து கொண்ட வேட்பாளராகவும், பணக்கார வேட்பாளராகவும் திகழ்கிறார்.
