சென்னை: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (FCRA) திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள திருத்தங்கள், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் மத சிறுபான்மை அமைப்புகளை குறிவைக்கும் தாக்குதலாக உள்ளது” என குற்றம்சாட்டினார்.
மேலும், “ஏற்கனவே வக்பு வாரிய சட்ட திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துக்களை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், தற்போது பிற மத சிறுபான்மை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது” என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், கேரளாவில் தேர்தல் நிலைமை இருப்பதாலும், தற்காலிகமாக பின்வாங்குவது போல நடித்து, பின்னர் பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் மூலம் இந்த திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முயற்சிகளை கைவிட்டு, இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.
இதேபோல், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்தும், “சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
