கடந்த திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 25 சதவீத திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிப்காட் உள்ளிட்ட தொழில் வளாகங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் உறுதி செய்யப்படும் என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் கையெழுத்து மட்டுமே இலக்காக இல்லாமல், நிறுவனங்களின் பின்னணி மற்றும் முதலீட்டு திறனை ஆய்வு செய்து, நடைமுறைக்கு வரும் திட்டங்களையே அரசு முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த முறை திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான ஆய்வுகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.
சோலார் மின் உற்பத்திக்காக கருவேல மரங்கள் நிறைந்த தரிசு நிலங்களை பயன்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், சோலார் பயன்பாட்டுக்கான 1 சதவீத வரி தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பல நடைமுறைக்கு வராத நிலையில், தற்போதைய அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துவதே இலக்கு என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டு பின்னர் குஜராத்துக்கு சென்ற செமிகண்டக்டர் ஆலையை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய அரசின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
