பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சையான பேச்சு நிகழ்ந்ததை தொடர்ந்து, தி.மு.க. முன்னாள் எம்.பி. முகமது அப்துல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் செல்வராஜுக்கு ஆதரவு கோரி, அறிவொளி நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் முகமது அப்துல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜ. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பா.ஜ. பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் நித்யா அளித்த புகாரில், “பா.ஜ. மற்றும் அ.தி.மு.க.வினர் ஓட்டு கேட்க வந்தால் செருப்பை கழற்றி அடியுங்கள்” என முகமது அப்துல்லா பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த பேச்சு மக்களிடையே வெறுப்பையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் இருந்ததாகவும், தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நிகழ்வின் காட்சிகள் தேர்தல் அதிகாரிகளால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, முகமது அப்துல்லாவை கைது செய்ய வேண்டும் என்றும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
புகாரின் அடிப்படையில், தேர்தல் நேரத்தில் வெறுப்பு மற்றும் பகைமை தூண்டும் பேச்சு, ஆத்திரமூட்டும் செயல்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், முன்னாள் எம்.பி. முகமது அப்துல்லா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
