மும்பை:
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்த நிலையில், ஏர் இந்தியா விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக ₹26,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நீடிக்கும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதன் விளைவாக, விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் ஒரு பேரல் விமான எரிபொருள் ₹9,250 ஆக இருந்த நிலையில், மார்ச் இறுதியில் அது ₹18,162 ஆக உயர்ந்துள்ளது.
விமான போக்குவரத்து சேவையில் மொத்த செலவின் 40 முதல் 45 சதவீதம் வரை எரிபொருளுக்கே செலவாகிறது என விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால், விலை உயர்வு விமான நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தொலைவுக்கு ஏற்ப எரிபொருள் கூடுதல் கட்டணத்தை நிர்ணயிக்க இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, அந்த நிறுவனங்களும் சமீபத்தில் கட்டண உயர்வை அறிவித்தன.
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இதன்படி, உள்நாட்டு விமான பயணங்களில் 500 கிலோமீட்டர் வரை பயணங்களுக்கு ₹299 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 2,000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணங்களுக்கு அதிகபட்சமாக ₹899 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
சர்வதேச பயணங்களில், சார்க் நாடுகளுக்கு ₹2,232, ஐரோப்பிய நாடுகளுக்கு ₹19,605, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூர நாடுகளுக்கு ₹26,040 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு பெரும்பாலான பாதைகளில் இன்று முதல் அமலுக்கு வரும். ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு நாளை மறுதினம் முதல் அமலாகும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
