சென்னை: வி.சி.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், ‘சீட்’ மறுக்கப்பட்ட தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல நிர்வாகிகள் பங்கேற்காதது கட்சிக்குள் அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.க்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வேட்புமனு கோரி கட்சியினரிடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. குறிப்பாக காட்டுமன்னார்கோவில் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் ஏற்பட்ட போட்டி, கோஷ்டி மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவன் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலின் போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கட்சி அலுவலகத்திற்கு வராமலேயே தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வேட்பாளர்கள் பட்டியலை திருமாவளவன் அறிவித்தார். அதில், சிதம்பரம் தொகுதி எம்.பி.யான அவர், சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், அவரது உறவினரான மாலதி கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் சிந்தனைச்செல்வனுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சென்னை அசோக் நகர் வி.சி.க. அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அதேபோல், வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்பட்டிருந்தாலும், திருமாவளவன் சந்திக்காமல் சென்றுவிட்டார்.
இதற்கிடையில், தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், வி.சி.க.க்கு கூடுதல் தொகுதிகளை பெறும் வலிமை இருப்பதை பழனிசாமி வெளிப்படுத்தியதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் அனைவருக்கும் மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும், கூடுதல் தொகுதிகள் கோரப்பட்டாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், தி.மு.க. கூட்டணியின் வலிமையை சகிக்க முடியாதவர்கள் தவறான குற்றச்சாட்டுகள் மூலம் பிரசாரத்தை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றும், கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
