ராமேஸ்வரம் கோயிலில் ரூ.3.4 கோடி லட்டு மோசடி: 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயில் லட்டு விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடி நடைபெற்றதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கோயில் ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோயிலில் தினமும் பக்தர்களுக்கு 30 கிராம் எடையிலான 1,520 லட்டுகள் இலவச பிரசாதமாக வழங்கப்படுகின்றன. மேலும், 50 கிராம் எடையிலான லட்டுகள் தலா ரூ.15க்கு கோயில் வளாகத்தில் உள்ள கவுண்டரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விற்பனையை கண்காணிக்கும் பொறுப்பில் இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் விற்கப்படும் லட்டுகளில் ஒரு பகுதியை தனிப்பட்ட முறையில் தயாரித்து விற்று, அதன் வருவாயை சொந்த கணக்கில் வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே 3ஆம் தேதி செய்தி வெளியானதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 14ஆம் தேதி லட்டு தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, மூலப்பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 முதல் 2026 பிப்ரவரி வரை லட்டு விற்பனை கணக்குகள் குறைவாக பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆய்வுக்குப் பிறகு லட்டு விற்பனை திடீரென அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இலவச லட்டு வழங்குதலிலும், தனியாக விற்பனை செய்யப்பட்ட லட்டுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 22.71 லட்சம் லட்டுகள் தொடர்பாக ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் பஞ்சமூர்த்தி மற்றும் அவரது மகன் விக்ரம் உள்ளிட்ட ஊழியர்களான சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா மற்றும் அம்பிகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
