புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலேவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் மகள் ரேவதி சுலே, நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங் லகானியை திருமணம் செய்துள்ளார். இதையொட்டி டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சி வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது திருமண மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் பிரதமர் மோடி உற்சாகமாக உரையாடினார்.
திருமண வரவேற்பின்போது பிரியங்கா காந்தியை பார்த்த பிரதமர் மோடி, அவரது நலனை விசாரித்தார். அதற்கு பிரியங்கா காந்தியும் பிரதமரின் நலனை விசாரித்தார்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை பார்த்து அவர் முன்பை விட சற்று மாறியிருப்பதாக நகைச்சுவையாக கூறினார். இதற்கு பிரதமர் மோடியும் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.
தொடர்ந்து கார்கேவின் தோளில் கை வைத்து பிரதமர் மோடி உற்சாகமாக உரையாடினார். இதனை பார்த்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியும் சிரித்தபடி அவர்களுடன் பேசினார்.
பார்லிமென்ட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் கடுமையாக விவாதித்து வரும் நிலையில், அதற்கு மாறாக திருமண நிகழ்ச்சியில் தலைவர்கள் நட்புடன் உரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
