கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் என பாஜ தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சியாக இருந்த பாஜ, 207 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை பாஜ தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது அரசின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அரசியல் நடைமுறைகளின்படி ராஜினாமா கடிதம் கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.
ஆனால், தற்போதைய அரசியல் பரபரப்பில் மம்தா ராஜினாமா செய்யாததால், சட்டசபை நேற்று கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாஜ சட்டசபை கட்சிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்திற்குப் பிறகு மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
