கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் கவலை தெரிவித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பாஜ எம்.பி.யும் மத்திய அமைச்சருமான மஜும்தார் கூறுகையில், எல்லை மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றம் அரசியல் சூழ்நிலையை பாதித்து வருவதாக தெரிவித்தார். அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை என்றாலும், மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 33 சதவீதம் உள்ளதாக முதல்வர் தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், அதன் பின்னர் தேர்தலில் ஹிந்துக்கள் வெற்றி பெறுவது சிரமமாகிவிடும் என்றும் அவர் கூறினார். இதனால், வரும் தேர்தல் முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு முஸ்லிம் துணை முதல்வர் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன என்றும், அது நிறைவேற்றப்பட்டால் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். இந்த தேர்தல் மாநிலத்தின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் என்றும் மஜும்தார் தெரிவித்தார்.
