பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மேற்காசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர இவ்வளவு காலம் பிடித்தது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார். தற்போதைய ஒப்பந்தம் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், பிராந்திய அமைதிக்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜி7 மாநாட்டில் ஈரான் தொடர்பான போர் குறித்து நேரடி விவாதம் நடைபெறவில்லை என்றும், ஆனால் ஈரான் பிராந்திய பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக பல நாடுகள் கருதியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ராணுவ நடவடிக்கைகளை நீட்டிப்பதை விட பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என்றார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெறக் கூடாது என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக டிரம்ப் வலியுறுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தி திறந்த நிலையில் தொடர வேண்டும் என்பதிலும் ஜி7 நாடுகள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்காவுக்கு வலுவான உறவு இருப்பதாக கூறிய டிரம்ப், சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு நாடுகளின் கூட்டாண்மை தொடர்ந்து வலுவாக இருப்பதாக தெரிவித்தார். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் இந்த விவகாரத்தில் நடுநிலையான அணுகுமுறையை கடைப்பிடித்ததாக அவர் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி7 மாநாட்டில் நீண்ட நேரம் பேசியதாக குறிப்பிட்ட டிரம்ப், அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும், மேற்காசிய அமைதி முயற்சிக்கு இந்தியா அளித்த ஆதரவை பாராட்டினார்.
