கான்பெரா: பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக இந்தியா நடத்தி வரும் ரைசினா மாநாடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
டில்லியில் 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ரைசினா மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் மாநாடு மற்றும் சீனாவின் போவாவ் மாநாடுகளை விட சிறப்பானதாக உள்ளது.
ஏனெனில் இந்த மாநாட்டில் அரசியல் சக்தி வாய்ந்த நாடுகள் அல்லது தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை.
அதே நேரத்தில் மாநாட்டை நடத்தும் அரசையும் புகழ்ந்து பேசும் நிலையும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.
அவர் தொடக்க அமர்வில் கலந்து கொண்டு முக்கிய உரைகளை கவனமாக கேட்பார். ஆனால் அவர் தானாக உரையாற்றுவதில்லை.
அமெரிக்கா மற்றும் சீன அதிபர்களுக்கு பிறகு உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அவர் இருக்கலாம்.
அதுவே இருந்தாலும் மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்கும் பண்பையும் அவர் கொண்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தாலும் அதிகார மமதை அவரிடம் இல்லை.
பாஜ ஆட்சியில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள், துடிப்பான ஊடகங்கள் மற்றும் வலுவான சுயாதீன நீதித்துறை உள்ள நாடுகளில் சர்வாதிகார போக்கு இருக்க முடியாது.
மேலும் சர்வாதிகார நாடுகள் எந்த விஷயத்தையும் சுதந்திரமாக விவாதிக்க அனுமதிக்காது.
ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ரைசினா மாநாட்டில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் மற்றும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தது இதற்குச் சான்றாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
