சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது தவெக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Sekar Babu மீது போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக வேட்பாளராக போட்டியிட்ட சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது சேகர்பாபு தன்னை தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக சினோரா அசோக் புகார் அளித்துள்ளார். மேலும், தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சேகர்பாபு மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் குற்றம் செய்யும் நோக்கத்துடன் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழும் கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
