மாநில முதல்வராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்த தலைவர்களில் அதிக நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்ற புதிய சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றுள்ள மோடி, தற்போது முதல்வர் மற்றும் பிரதமர் ஆகிய இரு பதவிகளிலும் அதிக நாட்கள் இருந்த தலைவர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
குஜராத் மாநில முதல்வராக 2001 முதல் 2014 வரை பதவி வகித்த மோடி, அதன் பின்னர் 2014 முதல் இந்திய பிரதமராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுவரை அவர் முதல்வராக 4,611 நாட்களும், பிரதமராக 4,399 நாட்களும் பதவி வகித்துள்ளார். இதன்மூலம் இரு பதவிகளிலும் சேர்த்து மொத்தம் 9,010 நாட்கள் பொறுப்பில் இருந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்த சாதனையைத் தொடர்ந்து, இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளார். அவர் ஒருங்கிணைந்த பம்பாய் மாநிலத்தின் முதல்வராக 1,655 நாட்களும், பிரதமராக 857 நாட்களும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 2,512 நாட்கள் அவர் இரு பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் உள்ளார். அவர் ஆந்திரப் பிரதேச முதல்வராக 469 நாட்களும், பிரதமராக 1,793 நாட்களும் பணியாற்றியுள்ளார். இதனால் மொத்தம் 2,261 நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்.
நான்காவது இடத்தில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் இடம்பெற்றுள்ளார். அவர் உத்தரப் பிரதேச முதல்வராக 771 நாட்களும், பிரதமராக 344 நாட்களும் இருந்துள்ளார். மொத்தம் 1,115 நாட்கள் அவர் பதவி வகித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா உள்ளார். கர்நாடக முதல்வராக 538 நாட்களும், பிரதமராக 325 நாட்களும் இருந்த அவர், மொத்தம் 863 நாட்கள் இரு பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
ஆறாவது இடத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங் உள்ளார். அவர் உத்தரப் பிரதேச முதல்வராக 555 நாட்களும், பிரதமராக 171 நாட்களும் இருந்துள்ளார். மொத்தம் 726 நாட்கள் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்.
இதன்மூலம், முதல்வர் மற்றும் பிரதமர் ஆகிய இரு உயரிய நிர்வாகப் பதவிகளிலும் அதிக நாட்கள் பதவி வகித்த தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி தன்வசப்படுத்தியுள்ளார்.
