சென்னை: “முதல்வர் பதவியே கொடுத்தாலும் யாருடனும் கூட்டணி இல்லை,” என த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பயந்த ஒரே தலைவர் விஜய்; அந்த பயத்தில்தான் செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.
‘அடித்து விட்டு வா என்றுதான் அனுப்பினர்; ஆனால் கொன்று விட்டனர். அந்த பழியை த.வெ.க., மீது திணித்தனர். தற்போது அந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவர்கள்மீதே திரும்பியுள்ளது’ எனவும் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இனி எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம்; த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படமாட்டார்கள் எனவும் கூறினார்.
ரஜினி எப்போதும் நம் அன்புக்குரியவர்; அவரது மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கு மேடை மற்றும் பொறுப்பும் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் த.வெ.க., தனித்துப் போட்டியிடும்; முதல்வர், துணை முதல்வர், 50 சீட் என பல்வேறு வகைகளில் பேரம் பேசப்பட்டும் விஜய் அதை மறுத்துவிட்டார் எனவும் கூறினார்.
ஜனநாயகன் படம் வெளியாகாமல் தடுத்து நிறுத்தப்படுவதற்கு அரசியல் காரணம் தான் எனவும், கீழ்தரமான பிரசாரத்தால் ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் செய்தது தி.மு.க., என்றும் குற்றம்சாட்டினார்.
அதேபோல், அ.தி.மு.க.வும் ரஜினிக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், ரஜினி கட்சி தொடங்க முயன்றபோது அதை கடுமையாக எதிர்த்தவர் பழனிசாமி எனவும் தெரிவித்தார்.
தன் பேச்சால் ரஜினிக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும் த.வெ.க., யாருடனும் கூட்டணி அமைக்காது எனவும் அவர் கூறினார்.
