மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்த முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் கமிஷனை அணுகியுள்ளனர்.
தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 26 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில், ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆளும் பாஜகவுக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் இரண்டு இடங்களில் வெற்றி உறுதியாகக் கருதப்படுகிறது. 64 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, மத்திய பிரதேச மீனவர் நல வாரியத் தலைவர் மகேஷ் கெவத்தை மூன்றாவது இடத்திற்கான வேட்பாளராக பாஜக அறிவித்தது.
இந்நிலையில், தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்ற புகாரின் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தார். இந்த புகாரை பாஜக வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்திருந்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்களை சந்தித்து மனு அளித்தனர். அப்போது மீனாட்சி நடராஜனும் உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பிறகு பேசிய அபிஷேக் சிங்வி, “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்ற வழக்குகள் அல்லது முறையாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே வேட்புமனுவில் தெரிவிக்கப்பட வேண்டும். மீனாட்சி நடராஜன் தொடர்பாக எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது” என்றார்.
மேலும், “நீதிமன்றம் இன்னும் வழக்கை விசாரணைக்கு ஏற்காத நிலையில், அதை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வேட்புமனுவை நிராகரித்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது. தேர்தல் கமிஷன் தனது நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இது ஜனநாயகத்திற்கு எதிரான மற்றும் அநீதியான நடவடிக்கையாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
