மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடன் தொடர்புடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நேர்முக உதவியாளரும் (நிலம்), துணை கலெக்டருமான அன்பழகனை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலில் நடைபெறும் பூஜை மற்றும் சேவைகளுக்காக, புதுக்கோட்டை ராஜ்குமார் தட்சிணாமூர்த்தி துரைராஜா – துரைராணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ் மற்றும் அனந்தராமன் உள்ளிட்ட 19 பேர் மீது, போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்து நிலத்தை அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், போலி ஆவணங்களை பயன்படுத்தி பட்டா பெற்றதாகக் கூறப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு முக்கிய திட்டமிடுபவராகக் கருதப்படும் இளையராஜாவையும் பெங்களூருவில் கைது செய்தனர்.
இந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நேர்முக உதவியாளராக (நிலம்) பணியாற்றி வரும் துணை கலெக்டர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் மதுரையில் தாசில்தாராக பணியாற்றியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களையும் அடையாளம் கண்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
