மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அலைபேசி கொண்டு செல்ல தடை அமலில் உள்ள நிலையில், இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் அலைபேசியை கொண்டு சென்று ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் வளாகத்தில் சிலர் அலைபேசியில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது அலைபேசிகளை கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக ஒப்படைக்க கோயில் நிர்வாகம் தனி வசதியையும் ஏற்படுத்தியது.
கோயிலின் நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார், மெட்டல் டிடெக்டர் சோதனை உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, அதன் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் 16 வயது சிறுமி கோயிலின் பொற்றாமரைக் குளம் பகுதியில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம் என ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
தற்போது, மற்றொரு இளைஞர் அதே பொற்றாமரைக் குளம் பகுதியில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருப்பது மீண்டும் கோயில் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “இது பக்தி நிறைந்த புனிதத் தலமா அல்லது சமூக வலைதள பிரபலத்திற்காக பயன்படுத்தப்படும் இடமா என்ற கேள்வி எழுகிறது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் அலைபேசி கோயிலுக்குள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
மேலும், ஆகம விதிகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி கோயிலை ரீல்ஸ் மற்றும் விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் மீது அறநிலையத் துறையும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
