சென்னை: மின்துறையில் நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் முதல்கட்டமாக 15,000 பேரை புதியதாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் Nirmal Kumar தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட காலமாக அதிக பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், மேலும் காலதாமதம் செய்யாமல் தேவையான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அடுத்தடுத்த கட்டங்களிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நிலுவை பிரச்னைகளை தீர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மின்துறையில் சுமார் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறிய அமைச்சர், அதனை சமாளிக்கும் நோக்கில் முதல்கட்டமாக 15,000 புதிய பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், மின்சார வாரியத்தை சீரமைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த பதவி உயர்வுகளை அரசு தற்போது வழங்கியுள்ளதாகவும், அந்த விவகாரம் தன்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
