மாணவர்கள் மீது நடவடிக்கை கூடாது
மாணவர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை மாதம் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவு
மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தது.
மாணவருக்கு நோட்டீஸ்
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கவுதம புத்தா பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினருமான அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருக்கு கிரேட்டர் நொய்டா நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று (செப். 9) உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா முறையிட்டார்.
“உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது”
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவருக்கு கிரேட்டர் நொய்டா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்த வழக்கறிஞர், இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அப்பட்டமாக மீறும் செயல் எனக் கூறினார்.
செப்டம்பர் 4-ம் தேதி அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸ் பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அது தொடர்பான தகவல் ஊடகங்களில் மட்டுமே வெளியானதாகவும் வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்
இதையடுத்து, மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்து கிரேட்டர் நொய்டா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்போவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முந்தைய உத்தரவில் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
