புதுடில்லி: மத்திய கிழக்கில் உருவாகியுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மத்திய கிழக்கில் உருவாகி வரும் பதற்ற நிலைமை உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலைமை பொதுமக்களுக்கு கடுமையான துன்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தற்போதைய சூழலில் ஒரே தீர்வாகும்.
அனைத்து தரப்பினரும் விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் ஈரான் அனைத்து தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
