புதுடில்லி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வந்த தனியார் ஐ.டி. நிறுவனத்தை சுற்றியுள்ள மதமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்த நிலையில், அந்த நிறுவனத்தின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாசிக்கில் இயங்கும் அந்த பி.பி.ஓ. நிறுவனத்தில் பணிபுரியும் 25 முதல் 32 வயதுடைய பெண்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஒன்பது பெண் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரில், முறையற்ற தொடுதல், ஆபாச பேச்சு மற்றும் பாலியல் சீண்டல்கள் நீண்ட காலமாக நடந்ததாகவும், சிலர் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல், குறிப்பிட்ட மத வழிபாட்டு முறைகளை கட்டாயப்படுத்துதல் மற்றும் உணவு தொடர்பான வற்புறுத்தல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. மறுப்புத் தெரிவித்த பெண்கள் மீதான தொல்லைகள் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் உயரதிகாரிகள் இவ்விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததுடன், சில நேரங்களில் மறைமுக ஆதரவு அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மனிதவளத் துறை அதிகாரி நீடா கானை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் சார்பில் சி.இ.ஓ. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுந்த சர்ச்சையை அடுத்து, நாசிக்கில் உள்ள கிளை தற்காலிகமாக மூடப்பட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத சுதந்திரம் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டாலும், அது பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்திற்கு உட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டாய மதமாற்ற சம்பவங்களை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான தீவிர குற்றமாக கருதி கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசிய மகளிர் கமிஷன் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க தீர்மானித்து, நாசிக்கில் நேரடி ஆய்வு மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளது.
