புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டில் தான் நிறைவு பெறும் என்பதால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இந்த சட்டம் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 543இல் இருந்து 816 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுவது தவறானது என்றும், இது பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் விமர்சித்தார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கிடையிலான தொகுதி வித்தியாசம் அதிகரிக்கும் என்றும், இதனால் தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாடு பொருளாதார மற்றும் வெளியுறவு சவால்களை சந்தித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மக்களை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
