வாஷிங்டன்: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் கால அளவு குறித்து என்னால் கூற முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதை இப்போது சொல்ல முடியாது என்றும், அதை தெரிந்துகொள்வதால் என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய கிழக்கிலும் உலகம் முழுவதும் நிலவும் அணு ஆயுத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தற்போது அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையான நிலையில் உள்ளது.
எதிரி தரப்பின் கடற்படை மற்றும் விமானப்படை பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர்களின் ராணுவத்தின் பெரும்பகுதியும் பலவீனமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர்களிடம் தற்போது ரேடார் வசதிகள் இல்லை என்றும் கூறினார்.
அமெரிக்கா சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலக்குகள் சில அளவில் மாறுபடக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு இணையான சக்தி உலகில் இல்லை என்றும் அவர் கூறினார்.
தனது முதல் பதவிக்காலத்திலேயே அமெரிக்க ராணுவத்தை வலிமைப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை அமெரிக்க கடற்படை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கு வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்களில் ஒன்றாக, ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறினார்.
கார்க் தீவில் உள்ள முக்கிய ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல தடையுண்டாக்க முயற்சி செய்தால் அதற்கு கடுமையான பதில் அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகிற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஈரானின் ராணுவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆயுதங்களை கைவிடுவது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
