மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை மனுதாரரே என்பதை டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும், வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முருகன் மீது 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேனி விரைவு மகளிர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் N. Anand Venkatesh மற்றும் K. K. Ramakrishnan ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது பெற்றோரும் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கவில்லை என்றும், டி.என்.ஏ அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், மாதிரிகள் சேகரிப்பு மற்றும் பரிசோதனை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதாகவும், டி.என்.ஏ அறிக்கைக்கு எதிராக விசாரணையின் போது எந்தவித கேள்விகளும் எழுப்பப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் பிறழ் சாட்சிகளாக மாறியிருந்தாலும், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை மனுதாரரே என்பதை டி.என்.ஏ அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டனர். மேலும், டி.என்.ஏ அறிக்கையை எதிர்த்து வாதிடுவதற்கு மனுதாரருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள நிலையை கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி உத்தரவிட்டனர்.
