“பேரங்கள் தெரியாது; கோரிக்கைகள் தான் தெரியும்” – வீரபாண்டியன்
தஞ்சாவூர்: “எங்களுக்கு பேரங்கள் தெரியாது; கோரிக்கைகள் தான் தெரியும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நல கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, “தமிழக மக்கள் எதிர்பார்த்தபடி முதல்வர் விஜய் நல்லாட்சியை வழங்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “இந்தியாவிலேயே நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
“அரசின் பார்வைக்கு வெளியே இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு, புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து சிலர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “கம்யூனிஸ்ட்கள் ஆளும் அரசுக்கு தொந்தரவு கொடுப்பார்கள் என்ற கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.
“கொசு மருந்து அடிக்கும் தொழிலாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. அவற்றை முன்னெடுப்பதில் எங்கள் கவனம் இருக்கும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “குதிரை பேரமோ, ஆடு பேரமோ எந்த அரசியல் பேரங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டதில்லை. எங்களுக்கு பேரங்கள் தெரியாது; கோரிக்கைகள் தான் தெரியும்” என்று தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் விஜய் பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவை நிதியை கேட்டு பெற வேண்டும். மத்திய அரசும் எந்த தாமதமும் இல்லாமல் அந்த நிதியை வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும், போதை பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் வீரபாண்டியன் குறிப்பிட்டார்.
“கல்வி மூலம் மட்டுமே மனித மனங்களை மாற்ற முடியும். எனவே, போதை தடுப்பு விழிப்புணர்வை கல்வி இயக்கத்தின் வாயிலாக தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
