Nashik நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஐ.டி. நிறுவனத்தின் பி.பி.ஓ. மையத்தில், இளம் பெண் ஊழியர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்கள் மீது மதமாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு உடன்படாதவர்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் ஒன்பது வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சில ஊழியர்கள் பெண் பணியாளர்களை மதம் மாற வற்புறுத்தியதாகவும், மறுத்தவர்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் டேனிஷ் ஷேக், தவுசிப் அத்தார், நிடா கான் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 106 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணின் வாக்குமூலத்தின்படி, தனது மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை பயன்படுத்தி சிலர் தன்னை மதமாற்றத்திற்கு தூண்டியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட மதம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் உரைகளை தொடர்ந்து பார்க்க வற்புறுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் மனநிலையை மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை ஏற்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து இறுதி முடிவு நீதிமன்ற விசாரணையின் பின்னரே தெரியவரும்.
