கோவை: மும்மொழிக் கொள்கையை காரணமாகக் காட்டி, மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் நவோதயா பள்ளிகளை தொடங்க தமிழக அரசு தொடர்ந்து அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கு மாற்றாக தமிழக அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை முன்னிறுத்தி வருகிறது.
ஆனால் இப்பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் தரம் நவோதயா பள்ளிகளுக்கு இணையாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2021–22 கல்வியாண்டில் 10 பள்ளிகளுடன் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்த திட்டம் 38 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
மாணவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் “எமிஸ்” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை வழங்கப்படுகிறது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) தேர்ச்சி பெற்றவர்கள், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் கலை, விளையாட்டுத் திறனில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டு மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
வெளிப்பார்வைக்கு இப்பள்ளிகள் சிறப்பாக தோன்றினாலும், சில மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி, மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டு தற்போது 275 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியிலிருந்து 7 பேர் எம்.பி.பி.எஸ்., 4 பேர் கால்நடை மருத்துவம் மற்றும் பலர் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
மேலும் 39 மாணவர்கள் கிளாட், சிபட், ஏ.பி.யு., நிம்ஹான்ஸ் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் மூலம் முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளனர்.
மாநில பாடத்திட்டத்தில் படித்தும் மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து வருவதாக அரசு கூறுகிறது.
ஆனால் போட்டித் தேர்வுகளுக்காக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாதிரிப் பள்ளிகள் ஒரு குறுகிய அளவிலான நிவாரணமே தவிர முழுமையான தீர்வாக இல்லை என்றனர்.
அங்கு ஸ்மார்ட் போர்டு போன்ற வசதிகள் இருந்தாலும், தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதனால் சாதாரண அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் அனைவருக்கும் சம உரிமை என்று கூறும் அரசு நடைமுறையில் அதை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெரும்பாலான மாதிரிப் பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை.
கோவையில் இந்த ஆண்டுதான் 9ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ளது.
ஆனால் நவோதயா பள்ளிகள் இருந்தால் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும்.
ஆசிரியர்களின் சம்பளம், மாணவர்களின் உணவு மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட செலவுகளை முழுமையாக மத்திய அரசு ஏற்கும்.
இதனால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது; பள்ளிக்கான இடம் வழங்கினால் போதுமானது.
மேலும் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்கள், 33 சதவீதம் மாணவியர், 15 சதவீதம் எஸ்.சி. மற்றும் 7.5 சதவீதம் எஸ்.டி. மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
மாதிரிப் பள்ளிகள் இருந்தாலும், நவோதயா பள்ளிகளில் கிடைக்கும் 6ம் வகுப்பு முதல் தொடங்கும் கல்வி, கட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் நிதி உதவி ஆகியவற்றை தமிழக மாணவர்கள் இழந்து வருகின்றனர் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
