தமிழக சட்டசபையில் ஆற்றல்மிக்க எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை எதிரொலிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் புதிய அரசுக்கும், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “17வது தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றியை தெரிவிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி சட்டசபை, மக்கள் மன்றம் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஆற்றல்மிக்க எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், “ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்கள் தலைவர் கூறியதுபோல் எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முக்கிய பாலமாக இனி நாங்கள்தான் இருப்போம்” என்று தெரிவித்துள்ள உதயநிதி, மக்கள் தன்னிடம் வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து கடுமையாக உழைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
