சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த Srinivasa Sethupathi, சட்டசபை நம்பிக்கை ஓட்டெடுப்பு மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட வாக்கெடுப்புகளில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றிருந்தார். இதை எதிர்த்து, திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான Periyakaruppan சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தேர்தல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததாகவும், சீனிவாச சேதுபதி சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த வழக்கு கோடை விடுமுறை அமர்வில் நீதிபதிகள் எல். விக்டோரியா கவுரி மற்றும் என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன், மனுதாரர் மற்றும் பதிலளிப்பாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “ஒரு தொகுதிக்கான தபால் ஓட்டு மற்றொரு தொகுதிக்கு தவறாக அனுப்பப்பட்ட சம்பவம் மிகவும் முக்கியமானது. இதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவான நடைமுறை இல்லை” என்று குறிப்பிட்டனர்.
மேலும், “ஓட்டு எண்ணிக்கை முடிவடைவதற்கு முன்பே தவறான இடத்துக்கு அனுப்பப்பட்ட தபால் ஓட்டை சரியான தொகுதிக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் தவறியதே தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால், இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அந்த எம்எல்ஏ பங்கேற்பது அரசின் நிலைப்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி சட்டசபை நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட ஓட்டளிப்பு நடைமுறைகளில் பங்கேற்கக் கூடாது என்று இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த உத்தரவு அவரது வெற்றியை செல்லாது என அறிவிப்பதாகவோ, மனுதாரர் வெற்றி பெற்றதாக கருதப்படுவதாகவோ இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், திருப்பத்தூர் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் தேர்தல் கமிஷன் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
