டெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையம் யுரேனியம் செறிவூட்டலுக்காக பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தாலும், அங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாக மேற்கத்திய நாடுகள் முன்பு குற்றம் சாட்டியிருந்தன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களில் ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பன்னாட்டு அணுசக்தி முகமைக்கான ஈரானின் தூதர் ரெசா நஜாபி, அமைதிப்பணிக்காக செயல்பட்டு வந்த நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பன்னாட்டு அணுசக்தி முகமை தலைவர் ரபேல் குரோஸி, மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் சூழ்நிலை மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பேசிய அவர், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடந்ததாக உறுதிப்படுத்தும் தகவல்கள் தற்போது இல்லை என்றும் கூறினார்.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
மேலும் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு பொருட்கள் உள்ள பகுதிகள் குறித்து முன்கூட்டியே தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் அல்லது விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெரிய நகரங்களில் மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் அளவுக்கு கதிரியக்க அபாயம் உருவாகும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
